ஈப்போ, ஆகஸ்ட் 13 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் பேராக் மாநிலம் செலாமா சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுவை ஈப்போ தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அதன் படி, தேசிய முன்னணி மீண்டும் அத்தொகுதியை தக்க வைத்துக்கொண்டது.
அத்தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து பாஸ் வேட்பாளர் முகமட் அக்மால் கமாருதீன் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அம்மனுவில் சரியான காரணமும், உண்மை விவரங்களும் இடம்பெறத் தவறிவிட்டதாகக் கூறி அவரது மனுவை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி தள்ளுபடி செய்தார்.
மேலும், செலாமா சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் டாவுத் முகமட் யூசோப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் செலவுத் தொகையாக தலா 50,000 ரிங்கிட் முகமட் அக்மால் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் 619 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் டாவுத், பாஸ் வேட்பாளர் முகமட் அக்பாலை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.