Home நாடு ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள்

ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள்

610
0
SHARE
Ad

illegals-malaysiaபுத்ராஜெயா, ஆகஸ்ட்29 – நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அந்நியத் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்படும் அவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.

இச்சோதனையை குடிநுழைவுத்துறை, ராணுவம், ரேலா, பொது தற்காப்பு இலாகா, தேசிய பதிவு இலாகா, ஊராட்சி மன்றங்களின் அமலாக்கப் பிரிவினர் என சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

குடிநுழைவுத்துறை தலைமையிலான இந்த சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிகமாக அடைக்கலம் புகுந்துள்ள கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் உள்ள 12 தடுப்பு முகாம்களில் ஒரே நேரத்தில் 100 பேரை மட்டுமே தடுத்து வைக்க முடியும். எனவே கைது செய்யப்படும் அந்நியத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்படுவர்.

முறையான அனுமதியின்றி அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது ஆள் கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அலியாஸ் அகமது கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6பி திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்த சட்டவிரோத தொழிலாளர்களில் தொடர்ந்து தங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்காதவர்கள் மீது இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.