கோலாலம்பூர், அக் 2 – மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கிகள், கைவிலங்குகள், வாகனங்கள் என மொத்தம் 309 பொருட்கள் காணவில்லை என்று தேசிய கணக்காய்வாளர் சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அது குறித்து இன்று விளக்கமளித்துள்ள தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர், “அறிக்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் 37 துப்பாக்கிகள், படகில் எடுத்து வரும் பொழுது கடலில் விழுந்திருக்கலாம்” என்று தனது அனுமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், காணாமல் போன துப்பாக்கிகள் ஒவ்வொன்றுக்கும் குறியீட்டு எண் இருக்கும் என்றும், இன்று வரை பிடிபட்ட குற்றவாளிகளிடமிருந்து அது போன்ற எந்த ஒரு குறியீட்டு எண் கொண்ட துப்பாக்கிகளை காவல்துறை கைப்பற்றியதில்லை என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டிற்கும், 2012 ஆம் ஆண்டிற்கும் இடையே காணாமல் போனதாக கூறப்படும் 156 கைவிலங்குகள், 44 ஆயுதங்கள், 29 வாகனங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1.33 ரிங்கிட் மில்லியன் ஆகும்.