இஸ்லாமாபாத், டிசம்பர் 5- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர்வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருக்கிறார். “இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே எனது கனவு. அது எனது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைக்கிறேன்.
அணு ஆயுதங்களில் வல்லவர்களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளது” என்று நவாஸ் ஷெரீப் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியதாகவும் அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப்போட்டியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத் துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.