Home கலை உலகம் “பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்” – கமலஹாசன் பேட்டி

“பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்” – கமலஹாசன் பேட்டி

625
0
SHARE
Ad

Kamal-2---300-x-200சென்னை, ஜனவரி 26 – நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

#TamilSchoolmychoice

“பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு, முக்கியமாக நான்பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில்என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ள அவர் அரசுக்கும் தன்னைத் தேர்வு செய்தவர்களுக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

“இந்த பட்டத்திற்குத் தகுதி உள்ளவனாகஇனிமேல்தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பத்ம பூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட கமல்ஹாசன் முக்கியமாக தனது நண்பர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

அவரது பேட்டியின் சில விவரங்களைத் தமிழ் நாட்டின் மாலை மலர் பத்திரிக்கை பின்வருமாறு வெளியிட்டிருக்கின்றது.

கேள்வி: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

கமல்: பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர்.எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை.செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகிறேன்.

கே: தாமதமாக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

கமல்: இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அடுத்த கட்டம். இந்த விருதும் அப்படித்தான்.

கே: தெண்டுல்கருக்கு 25 ஆண்டு கால சாதனைக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது.உங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதே?

கமல்: இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளம் கேட்க கூடாது.கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. இந்த விருதுக்கு மக்கள் என்னைதகுதியாக்கியது மாதிரி பாரத ரத்னா விருதுக்கும் ஒரு நாள் தகுதி பெறவைப்பார்கள்.

ரஜினி வாழ்த்தினாரா?

கே: ரஜினி உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா?

கமல்: இன்னும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்.

கே: பத்மபூஷண் விருதை யாருக்கு சமர்ப்பிப்பீர்கள்?

கமல்: எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்தவிருதை சமர்ப்பணம் செய்கிறேன். நிறைய பேர் என்னிடம் சம்பளம் வாங்கி கற்றுக்கொடுத்தனர். நிறைய பேரிடம் நான் சம்பளம் கொடுத்து கற்றுக்கொண்டேன்.கே.பாலச்சந்தர், சண்முகம் அண்ணாச்சி போன்றோர் எனக்கு சம்பளம் தந்துகற்றுத்தந்தனர். இது மறக்க முடியாத நன்றிக் கடன். தீர்க்க முடியாத நன்றிக்கடன்.

கே: விஸ்வரூபம் படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்த விருதை நினைக்கிறீர்களா?

கமல்: எனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனிச்சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வேன்.

கே: ஆஸ்கார் விருது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கமல்: நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ஐ.எஸ்.ஐ. தான் (தரச்சான்று) தேவை. அந்த நாட்டுக்கு போகும் போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும்.தேவைப்பட்டால் போய்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப் பட்டாலோஎனக்கு அவர்கள் தேவைப்பட்டாலோ அது நடக்கும்.

கே: இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

கமல்: அந்த நிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லைஎன்பதற்கான அடையாளமும் இருக்கிறது. முழுவெற்றி பெறவில்லை. குறிப்பாக சாதிமுறை இன்னும் ஒழியவில்லையே. சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதியாரின்பாப்பாக்களுக்கும் கொள்ளு பேத்தி வந்து விட்டார்கள் என்றாலும் சாதிஒழியவில்லை. சாதி வெறி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது.

அரசியலுக்கு வருவாரா?

கே: எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

கமல்: இங்கு இருக்கும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான். 5ஆண்டுகளுக்குஒருமுறை ஓட்டுப்போடுகிறோம். கை விரலை கறையாக்கி கொள்கிறோம். அந்தகறை போதும்.

கே: விஸ்வரூபம்–2’ படம் எப்போது வரும்?

கமல்: படம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

கே: சுயசரிதை எழுதுவீர்களா?

கமல்: எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சுயசரிதையில் பொய்தான் எழுத வேண்டி வரும். உண்மை எழுதினால் பலரது மனம்தான் காயப்படும்.