இஸ்லாமாபாத், ஜன 30- பாகிஸ்தானில் ராணுவ புரட்சியால் ஆட்சியை பிடித்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை பாதிப்பை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இவர் மீதான தேச துரோக வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும்இவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெறவும் அனுமதி கோரியுள்ளார். இதனையொட்டி அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை மீது கேள்வியெழுப்பியுள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்திற்கு பதிலளிப்பதற்கு, முஷாரப்பின் வழக்கறிஞரான அன்வர் மன்சூர் கால அவகாசம் கேட்டார்.
மருத்துவ அறிக்கையின் மீதான தனது ஆட்சேபனைகளை உரிய நேரத்திற்குள் அவரது வழக்கறிஞர்கள் குழுவிடம் ஒப்படைத்து விட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.