ஜெனிவா,பிப்.17-எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து ரோம் நகருக்குச் சென்ற எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் கடத்தல்காரர்களால் மிரட்டப்பட்டு தரையிறக்கப்பட்டதாக சுவிஸ் அரசு உறுதி செய்துள்ளது.
உடனடியாக அந்த விமான நிலையம் மூடப்பட்டு காவல்துறையினர் விமானத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும், கடத்தல்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்துள்ள பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘ET702’ என்ற அந்த விமானம் அடிஸ் அபாபாவிலிருந்து நள்ளிரவு 00.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.40 மணிக்கு ரோம் நகரை சென்றடையும் நோக்கில் பயணித்தபோது இடையில் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த விமானம் கடத்தப்பட்டது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. எனினும், விமானத்தில் பயணம் செய்த சிலர் அடைக்கலம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.