கீவ், மார்ச் 18 – உக்ரைன் நாட்டின் கிரிமியா மாகாணம், சுதந்திரம் பெற்றதாக அம்மாகாண சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிபராக இருந்த யானுகோவிச், இதற்கு உடன்படவில்லை.
இதனால், மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை சமாளிக்க முடியாத, அதிபர் யானுகோவிச், ரஷ்ய எல்லையில் உள்ள கிரிமியா மாகாணத்தில் தலைமறைவானார். உக்ரைனின், கிரிமியா மாகாணத்தில் ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைக்க, ரஷ்ய அதிபர், புடின், மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டார்.
கிரிமியா மாகாணத்தை, உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, நேற்று முன்தினம், மக்களிடம் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க அப்பகுதி மக்கள் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து, 100 இடங்களை கொண்ட கிரிமியா மாகாண சட்டசபை, இந்த மாகாணம், உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக நேற்று அறிவித்தது.
அதுமட்டுமல்லாது, இந்த மாகாணத்தை, ரஷ்யாவின் ஒரு மாகாணமாக அங்கீகரிக்கும் படி, ரஷ்யாவிடம் விண்ணப்பித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தில் பணிபுரிந்த, கிரிமியா மாகாணத்தை சேர்ந்த, 500 வீரர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கிரிமியா சுதந்திரம் பெற்றதை, ஐ.நா. மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும், எனவும், இந்த சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.