புதுச்சேரி, ஏபர்ல் 9 – புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் உள்ள முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் படங்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுடன் சேர்த்து புதுவை மாநிலத்தில் உள்ள ஒரே தொகுதியான புதுச்சேரி தொகுதிக்கும் ஏப்ரல் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரியின் அலுவலக அறைக்குள், பத்திரிக்கையாளர்கள் சென்று செய்தி சேகரிக்கவும் படம் எடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் கலெக்டர் அலுவலக வாயிலுக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வேட்புமனு பரிசீலனையின் போதும் இந்த நிலைமை நீடித்தது. இது தவிர, பணம் பறிமுதல், வாகன நம்பர் ஏடுகளில் வாசகம், வாகனங்களில் சுழல் விளக்குகள் என அடுத்தடுத்து பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் தேர்தல் துறை அறிவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள முதல்வர் படத்தையும் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் படங்களையும் தேர்தல் துறை நீக்கியுள்ளது. கவர்னர் படம் மட்டும் துள்ளது. தேர்தல் துறையின் தொடர் கெடுபிடிகளால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.