புதுடெல்லி, ஏப்ரல் 12 – வாஜ்பாய் மிகப்பெரிய தலைவர் என்று காங்கிரஸ் தனது இணையத்தில் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இணையத்தளத்தில் இது குறித்து கூறியுள்ளதாவது,
1998-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பாரதீய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டை ஆட்சி செய்தது. அதன்பிறகு நடந்த தேர்தலில் அக்கூட்டணி தோற்றது.
வாஜ்பாய் சுத்தமானவர். பிறகு ஏன் 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்றுப்போனது? இதற்கு காரணம் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரம்தான்.
இதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் போனால், கட்சி தனது செல்வாக்கை இழந்துவிடும் என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் நம்பினார்.
மேலும் குஜராத் மாநில முதல்வர் பதவியில் இருந்து மோடி நீக்கப்படவேண்டும் என்றும் வாஜ்பாய் விரும்பினார். இது தேசிய ஜனநாயக கூட்டணி மந்திரி சபையில் முக்கிய பொறுப்பு வகித்த ஜஸ்வந்த்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் அப்போது வாஜ்பாய் கூறியதாகவும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
தான் பின்பற்றிய அரச தர்மத்தை நரேந்திர மோடி கடைபிடிக்கவில்லையே என்ற வேதனையும் வாஜ்பாயிடம் இருந்துள்ளது. மேலும், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று அப்போது பல தடவை மோடிக்கு வாஜ்பாய் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் எந்த பணியும் கலவரம் நடந்த பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கட்சியின் புதிய அடையாள சின்னமாக மோடியை காட்டும் பா.ஜனதா, வாஜ்பாயின் பாதையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது.
கட்சியின் ஒரு மிகப்பெரிய தலைவர் பதவி நீக்கம் செய்ய விரும்பியவரை பா.ஜனதா எப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம்? வாஜ்பாய் பா.ஜ கட்சியின் மிகப்பெரிய தலைவர்.
அரச தர்மத்தை ஒரு மாநிலத்தில் நிறைவேற்றத் தவறிய மோடி எப்படி இந்தியாவை அமைதியாகவும், சுபிட்சமாகவும் வழி நடத்திச் செல்வார் என்று நம்ப முடியும்? என காங்கிரஸ் கட்சியின் இணையத்தில் கூறியுள்ளது.