பெர்த், ஏப்ரல் 30 – காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமானம் வங்காள விரிகுடாவில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் எனஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் மார்க்கமாக தேடும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இயங்கி வரும் ஜியோ ரிசோனன்ஸ் என்ற அந்த நிறுவனம் இதுவரை, 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் துணைக் கோளப்படங்களைக் கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதன் மூலம்அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட பொருட்களையும்ஆராய்ச்சி செய்தனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நொறுங்கிய விமானத்தின்பகுதிகள் என்று சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட இடத்தில் விமானம் காணாமல் போவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அந்த இடத்தில் அப்படிப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்பது தங்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் இருப்பதாக இந்த நிறுவனம் கூறும் கடல் பகுதி வங்காளதேசத்திலிருந்து 190 கிலோ மீட்டர் தென்பகுதியில் இருப்பதாகவும், தற்போது தேடுதல் பணிகள் நடந்து வரும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து 5,000 கிலோ மீட்டர் தள்ளி இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கருத்துரைத்த, இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின், சீனாவும் ஆஸ்திரேலியாவும் இந்தத் தகவல் குறித்து ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள் என்றும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த மலேசியா தற்போது மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்றும் கூறினார்.
வங்காள விரிகுடாவில் இந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ளபொருட்கள் வர்த்தக விமானத்தின் பொருட்களைப் போன்று – குறிப்பாக போயிங் 777 விமானத்தின் பாகங்கள் போன்று – இருப்பதாக இந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.