கொழும்பு, மே 2 – இலங்கையில் 2009 –ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில், ஏராளமான விடுதலைப்புலிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலும் அழித்து விட்டதாக அந்நாடு அறிவித்தது. இந்நிலையில், அந்த அமைப்புக்கான சர்வதேச அபிமானிகளின் வலையமைப்பும், நிதி உதவியும் தொடருவதாக நாடுகளுக்கான பயங்கரவாதம் குறித்த தனது ஆண்டு அறிக்கையில் அமெரிக்கா கூறியுள்ளது.
2013 ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் குறித்த அறிக்கையை அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தெற்காசிய நாடுகள் பற்றி அமெரிக்கா தனது மதிப்பீடுகளை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 2009-ல் போர் முடிவுக்கு வந்தாலும், அங்கு போரில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகியோர் இழைத்தக் கொடுமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும் 2013-ல் இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படாவிடாலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு மற்றும் அதற்கான நிதியுதவிகள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு கவலைகள் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதேவேளை, இந்தியாவில் 2013-ல் பயங்கரவாத நடவடிக்கையால் 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மாவோயிஸ்ட்டுகளின் வன்செயல்களால் இறந்துள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.