ஹனோய், மே 6 – தெற்கு சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் வளம் பற்றிய ஆய்வுப் பணிகளை சீனாவின் தேசிய கடல் சார்ந்த எண்ணெய் நிறுவனம் (CNOOC 981) மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அந்நிறுவனம் அங்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி ஒருமைல் சுற்றளவில் கப்பல்கள் நுழைய சீன கடலோர காவல்படையினர் தடை விதித்துள்ளனர்.
சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு வியட்நாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘வியட்நாமின் கடற்பகுதியில் எங்கள் அனுமதியின்றி வெளிநாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது’ என்று கூறியுள்ளார்.
வியட்நாமின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, தங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான், ஆய்வு மேற்கொள்ளப் படுவதாகவும், அதனால் ஆய்வுப் பணிகளை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.