அபுதாபி, மே 6 – உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், புதிய உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தினைத் தயாரிக்கவும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான்-கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
பெருகி வரும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகளும், ஐ.நா சபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வரும் 2015-ம் ஆண்டில் பெரும் காலநிலை மாற்றச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் விதத்தில், ஒரு அடித்தளத்தை உருவாக்க முதல் கட்டமாக அபுதாபியில் நேற்று முன்தினம் ஒரு கலந்தாய்வு மாநாடு நடைபெற்றது.
உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலநிலை உச்சி மாநாட்டிற்குத் தேவையான அடித்தள செயல்பாடுகள் துவங்கப்பட்டது.
இதற்குத் தலைமை தாங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான்-கி-மூன் தனது உரையில் அடுத்த ஆண்டிற்கான புதிய உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தினைத் தயாரிக்க உலக நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர், சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதில் அவசர முயற்சிகளை மேற்கொள்ளாமல், உலக செழுமை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான நடைமுறைகளை செயல்படுத்தமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்குப் பின்னர் காலநிலை மாற்றச் செயல்பாடுகளின் உடன்பாடு குறித்து ஒரு இலக்கை எட்ட தொடர்ந்த முயற்சிகள், நீர்த்துப்போனது குறிப்பிடத்தக்கது.