மே 14 – ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை திறன்பேசியான ஐபோன் 6 -ஐ ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என ஆருடங்கள் கூறுகின்றன.
செல்பேசிகள் தொழில்நுட்பத்தில் முதல்நிலை நிறுவனமான ஆப்பிள், வழக்கமாக தனது ஐபோன் தயாரிப்புகளை செப்டம்பர் மாதமே வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி, ஒரு மாதம் முன்னதாகவே தனது அடுத்த தயாரிப்பினை களம் இறக்குகின்றது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகுந்த எதிர்ப்பார்ப்பு மற்றும் போட்டி நிறுவனங்களான சாம்சங், கூகுள், ஹவாய் போன்றவற்றின் அடுத்த அடுத்த வெளியீடு காரணமாக ஆப்பிள் முன்னதாகவே தனது தயாரிப்பினை சந்தைப்படுத்துகிறது எனக் கூறப்படுகின்றது.
இந்த புதிய ஐபோன் 6 ஆனது 4.7 அங்குல திரையுடன் வெளிவர இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து 5.5 மற்றும் 5.6 அங்குலத் திரை கொண்ட ஐபோன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 80 மில்லியன் ஐபோன் 6 திறன்பேசிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமான ஆப்பிளின் ஐபோன்கள் இதுவரை 500 மில்லியனுக்கு மேல் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய ஆருடங்கள் அனைத்தும் நம்பகத்தனமான இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதால், ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அடுத்த தலைமுறை திறன்பேசிகளை வரவேற்கத் தயாராகியுள்ளனர்.