இஸ்லாமாபாத், மே 17 – பாகிஸ்தானில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தானில் நடக்கும் மதகலவரங்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுவதாக பாகிஸ்தான் இந்து சபை தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வங்கானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்தான் மத கலவரம் காரணமாக அதிகமான இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமான இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இது போன்ற கலவரங்கள் காரணமாக இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் சிந்து மாகாணத்தில் நடைபெற்றுள்ளன.
பலுசிஸ்தான், கைபர் பக்துன்ஹவா போன்ற இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சிந்து மாகாணத்தில் இருந்துதான் அதிகமான இந்துக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் அப்பகுதியில் ஏராளமான இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. தர்மசாலாக்கள் கொளுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அல்தாப் அகமது கூறுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஷாசியா மாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.