கொழும்பு, ஜூன் 11 – இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்காது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 26-வது கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா கூறியுள்ளார்.
ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆற்றிய தொடக்க உரையில், “இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ரவிநாத ஆர்யசின்ஹா, “ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு, பாதிக்கும் குறைவான உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். அதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுவது, ஐ.நா. உறுப்பு நாடான இலங்கையின் இறையான்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் செயலாகும்.”
“இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. ஐ.நா.வின் இந்த விசாரணை அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய சமரசக் கொள்கையை சீர்குலைத்துவிடும். ஆகையால், ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது” என்று கூறியுள்ளார்.