புதுடெல்லி, ஜூலை 2 – சுனந்தா புஷ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவர் புகார் கூறியிருப்பது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் இயற்கையாக நடந்தது என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுனந்தா புஷ்கரின் உடலை பிரேதப்பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் குப்தா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் அளித்துள்ள மனுவில் சுனந்தா புஸ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் அரசியல் பலம் மிக்கவர்கள் என்பதால் இது தொடர்பான கூடுதல் தகவல்களை சீலிடப்பட்ட கவரில் அளிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவரின் இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.