ஹாங்காங், ஜூலை 3 – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி முறையை வலியுறுத்தி நேற்று ஒன்றரை லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தொடக்கத்தில் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், பின்னர் கடந்த 1997–ம் ஆண்டு சீனாவிடம் இரு நாடுகளின் ஒப்பந்தப்படி ஒப்படைக்கப்பட்டது.
சீனாவில் கம்யூனிச சட்டம் மேலோங்கி உள்ளதால் சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிலும் அது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஹாங்காங் மக்கள், தங்களுக்கு ஜனநாயக ஆட்சி முறை வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நேற்றும் ஹாங்காங்கில் போராட்டம் நடத்தினர். அங்குள்ள தெருக்கள் மற்றும் வீதிகளில் கூடிய சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜனநாயகம் குறித்த கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் முடிவில் சுமார் 200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
படங்கள்: EPA