கொழும்பு, ஜூலை 14 – இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்கிடையே மத ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சனை, அரசியல் ரீதியிலான குழப்பங்கள் உட்பட சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகான இந்தியாவின் உதவியை நாடி உள்ளது.
இது குறித்து சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியதாவது:-
“இலங்கையில் அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு குறித்து இந்திய வெளியுறத்துறை அமைச்சரிடம் விளக்கினேன்.
அந்தக் குழுவை தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் புறக்கணிப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டுமென அவரிடம் கேட்டுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில், மக்களிடையே ஏற்பட்டுள்ள மத ரீதியிலான பிரச்சனை கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் இலங்கை மெத்தனப்போக்கை கடைபிடிக்கின்றது என உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில் இலங்கை, இந்தியாவின் உதவியை இந்த விஷயத்தில் நாடி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.