புதுடெல்லி, ஜூலை 14 – “பிரிக்ஸ்” மாநாட்டில் பங்கேற்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலுக்கு சென்றார். இம்மாநாட்டின் மூலமாக, உலக அமைதி, பொருளாதார ஸ்திரதன்மையை நிலைநிறுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மோடி.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் சார்பில் 2 நாட்கள் நடக்கும் 6-வது மாநாடு பிரேசிலில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பிரேசில் புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் இருந்து புறப்படும் முன்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி கூறியதாவது, “உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல் குளறுபடிகள், குழப்பங்கள், மனித குலத்துக்கு ஆபத்து, மந்தமான பொருளாதாரம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
நாடுகளுக்கு இடையே நல்ல உறவு, உலகமெங்கும் அமைதி, பொருளாதார ஸ்திரதன்மையை உருவாக்குவதற்கான ஒரு வழியாக இந்த மாநாட்டை பார்க்கிறேன்.
“பிரிக்ஸ்” மேம்பாட்டு வங்கி, அவசரகால நிதி ஏற்பாடுகள் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. இதன் மூலம் உறுப்பு நாடுகள் மட்டுமல்ல அனைத்து வளர்ந்து வரும் நாடுகளும் பயன்பெறும்.
“பிரிக்ஸ்” நாட்டு தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள், இந்த மண்டலத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் அமைதியை, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கான வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்த சிறப்பான, அர்த்தமுள்ள பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த மாநாட்டை பார்க்கிறேன்” என்றும் மோடி கூறியுள்ளார்.
பிரதமருடன், நிதித்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயராம் ஆகியோரும் செல்கின்றனர்.
மாநாட்டின் முதல் நாள் கூட்டம் ஜூலை 15-ம் தேதி பிரேசிலின் போர்டலிசாவில் நடைபெறுகிறது. பிரேசில் அதிபர் தில்மா ரூஸ்செப் அழைப்பை ஏற்று செல்லும் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் ஆகியோருடன் பேச்சு நடத்துகிறார்.
மாநாட்டின் இடையே, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூஸ்செப் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.இரண்டாம் நாள் மாநாடு ஜூலை 16-ஆம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க தலைவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். அவர்களையும் மோடி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.