கோத்தா கினபாலு, ஜூலை 14 – சபா மாநிலத்தில் நேற்று மீண்டும் ஊடுருவிய பிலிப்பினோ ஆயுதமேந்திய கும்பல், காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றதோடு, மற்றொரு காவல்துறை அதிகாரியையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாபுல் தீவிலுள்ள பில்லாபோங் ஓய்வு விடுதி அருகே நடந்தது. அந்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கு விரைந்த 8 கடற்படை அதிகாரிகளை நோக்கி ஊடுருவல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்துல் ராஜா ஜமுவான் (வயது 32) என்ற காவல்துறை அதிகாரி மரணமடைந்தார்.
ஊடுருவல்காரர்கள் கறுப்பு நிற சட்டையையும், ராணுவ வீரர்கள் அணியும் கால்சட்டையும் அணிந்திருந்ததாகவும், கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், மலேசிய காவல் அதிகாரி ஒருவருக்கு சொந்தமான எம்.16 வகை தானியாங்கி துப்பாக்கி ஒன்று காணமால் போனதாகவும் நம்பப்படுகின்றது.
இந்நிலையில், காணாமல் போன காவல்துறை அதிகாரி, நேற்று இரவு தனது மனைவிக்கு செல்பேசியில் அழைத்து தான் உயிரோடு இருக்கும் விபரத்தை தெரிவித்திருப்பதாகவும், தன்னுடன் இன்னும் சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.