இஸ்லாமாபாத், ஜூலை 24 – பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்திற்கு மீண்டும் தனது விமான சேவையை தொடங்க இருப்பதாக எமிரேட்ஸ் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று அறிவித்ததுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமான நிலையத்தில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண் பயணி பலியானார். இருவர் காயமடைந்தனர்.
பெஷாவர் விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் இருந்ததாலும், விமான பயணிகளின் பாதுகாப்பைக் கருதியும் பெஷாவருக்கான விமான சேவையை கேத்தே பசிபிக், எமிரேட்ஸ், எட்டிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் கடந்த மாதம் தனது விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து, பெஷாவரில் எந்தவொரு சர்வதேச விமானமும் தரையிறங்கவில்லை. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு குறித்து சுமூக நிலை ஏற்பட்டதால் எமிரேட்ஸ் நிறுவனம், இன்று காலை 9 மணி முதல் துபாயில் இருந்து பெஷாவருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.