டெல்லி, ஜூலை 31 – இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியா வந்துள்ளார். இன்று அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசுகிறார்.
எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது இந்தப் பயணத்தின் போது ஜான் கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
அப்போது அவர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமவின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் மாத இறுதியில் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.