சென்னை, ஆக்ஸ்ட் 14 – ஷங்கர் இயக்கி, எப்போது வெளிவரும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத ‘ஐ’ படம் பற்றி இன்று ஒரு நாளிதழில் வந்திருக்கும் தகவல்களைப் படித்து கோடம்பாக்கமே அதிர்ச்சியில் உள்ளது.
விக்ரம் – எமி நடித்துள்ள “ஐ” படத்தை 15 மொழிகளில் வெளியிடுவதாகவும், 15,000 அரங்குகளில் வெளியிடுவதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு.”ஐ” படத்தை சீனாவில் மட்டும் 7000 அரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.
இதற்காக சீன மொழியில் டப்பிங் செய்து வருகிறார்களாம். படத்தின் பல காட்சிகள் சீனாவில் இதுவரை யாரும் போயிராத பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதால், சீனாவில் படம் நன்றாகப் ஓடு என நம்புகிறார்கள்.
150-கோடியில் (மலேசிய ரிங்கிட் 8,33,000,00) பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம் இந்த ‘ஐ’. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இது. அதுமட்டுமல்ல, ஆஸ்கர் ரவிச்சந்திரன் இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு பிரமாண்ட படத்தைத் தயாரித்ததே இல்லை.
10 இந்திய மொழிகளிலும், 4 வெளிநாட்டு மொழிகளிலும் ஐ படம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதாம். சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளில் அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல்களை, சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் வெளியிடப் போகிறார்களாம். சென்னையில் நடக்கும் விழாவுக்கு பில் கிளிண்டன் மற்றும் அர்னால்டு ஸ்வாஸர்நெகரை வரவழைக்கப் போகிறார்களாம்.
தமிழ்ப் படம் ஒன்று இத்தனை பிரம்மாண்டமாய் வெளியானதில்லை. மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையாக நடந்தால், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் அது புதிய சாதனைதான்.