Home நாடு “தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை” – ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு முனைவர் ரெ.கார்த்திகேசு பாராட்டு!

“தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை” – ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு முனைவர் ரெ.கார்த்திகேசு பாராட்டு!

1347
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – மலேசியாவின் பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட “செலாஞ்சார் அம்பாட்” என்ற நாவல், சுதந்திரத்திற்குப் பிறகு மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வரலாற்று சம்பவங்களை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள இந்த நாவலுக்கு, மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு விழாவில் 10,000 ரிங்கிட் சன்மானம் வழங்கப்படவுள்ளது.

இந்த நாவலை வாசித்த மலேசியாவின் மூத்த இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், நாவல் ஆசிரியர் கோ.புண்ணியவான் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

 

Punniyavan Feature(எழுத்தாளர் கோ.புண்ணியவான்)

அவர்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவரும், நாடறிந்த பிரபல எழுத்தாளரும் – விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் இந்த நாவலை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

“செலாஞ்சார் அம்பாட்” நாவலுக்கு ரெ.கார்த்திகேசு அவர்கள் எழுதிய முன்னுரையை கீழே காணலாம்:-

“சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழ் நாவல்கள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அடைந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. கதைச்சுவையையே முதன்மையாகக் கொண்ட நாவல்களிலிருந்து விலகி, சமுதாய வரலாற்றையும், தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் முதன்மைப்படுத்தும் நாவல்கள் இன்று முகிழ்த்துள்ளன.எழுத்தாள சகோதரர் கோ.புண்ணியவானின் “செலாஞ்சார் அம்பாட்” நாவலைப் படித்தபோது எனது மகிழ்ச்சி இரு மடங்காக இருந்தது. சமுதாய அவலத்தைக் கூற வந்த நாவலாக இருந்தாலும் கதைச்சுவையை விட்டுவிடாத நாவலாகவும் இது அமைந்திருப்பதுதான் காரணம்.”

“இந்த நாவல் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. ஆகவே அதன் நம்பகத் தன்மை உறுதியாக உள்ளது. பாத்திரங்கள் உயிருடனும் உணர்வுகளுடனும் அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களுக்கான இடப் பின்னணியும் அருமையாக அமைந்துள்ளது. கற்பனையால் கூட வடிக்க முடியாத அவல வாழ்க்கை உண்மை நிகழ்வுகளிலிருந்து பிறந்துள்ளது. மலேசியாவில் தமிழர்களின் ஒரு பகுதி வாழ்வு அவலமானதுதான். இந்த அவலத்துக்குப் பல காரணங்களை நாம் சொல்லலாம்.”

 

karthigesu-re-decd(முனைவர் ரெ.கார்த்திகேசு)

“காலனித்துவம் அவர்களை வெறும் கூலிப்படைகளாகவே வைத்திருந்தது ஒரு முக்கிய காரணம். சுதந்திரம் வந்த பின்னரும் புதிய அரசு பூமிபுத்திராக்களை முன்னேற்றும் உத்வேகத்தில் தோட்டப்புற இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய அக்கறையே இல்லாமல் அலட்சியப்படுத்தியதும் காரணம். ஆனால் இந்த மக்களின் அறியாமையும் முயலாமையும் இணைந்து அவர்களை இந்த அடிமை நிலையிலிருந்து விலகி உயரவிடாமல் மனத்தால் முடக்கிக் கட்டிப்போட்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம். முனியம்மா மற்றும் அவளோடு பயணப்பட்ட குழுவினர் இந்த அறியாமையினால் தான் ஓர் அவலத்திலிருந்து இன்னொரு அவலத்துக்குள் சென்று விழுந்தார்கள்.”

“மலேசியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியிருந்த நிலையிலிருந்து தொழில்வளம் பெருகிய நாடாக வளர்கையில், இந்தக் குழுவினரின் விதி எதிர்த் திசையில் பயணிக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து முழு அடிமைகளாக ஒரு ரகசியக் கும்பலிடம் சிக்குகிறார்கள். மலேசியாவின் சமூக வரலாற்றில் இருக்கும் பெரிய முரணை இந்த நிகழ்வுகள் சித்தரிக்கின்றன. ஆனால் மலேசிய வரலாற்றை அறிந்தவர்களுக்கு இம்மாதிரி முரண்களை வாசிப்பின் போது எழுப்பிக்கொண்டே இருந்தாலும், இந்நாவலின் முதல் நோக்கம் இந்த இக்கட்டில் அகப்பட்டுக்கொண்ட மக்களின் அனுபவங்களையும் மன உணர்வுகளையும் வாசிப்பவருக்கு உணர்த்துவது என்றே நான் எண்ணுகிறேன்.”

“ஒரு நல்ல நவீன நாவலாசிரியன் தன் பாத்திரங்களை நடமாடவிட்டுப் பேசவிடவேண்டுமே தவிர தானே தலையிட்டு வாசகனிடம் பேசக்கூடாது என்று கூறப்படுகிறது. இதைப் புண்ணியவான் பெரும்பாலும் கடைபிடித்திருந்தாலும் முழுமையாகக் கடைபிடிக்கிறார் என்று கூறமுடியாது. முனியம்மா, இருளப்பன் தண்டல், சாத்துக் கிழவன், முனியன் என வரும் பாத்திரங்கள் தங்கள் செய்கைகளாலும் பேச்சாலுமே தங்களைப் பாத்திரங்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பல இடங்களில் ஆசிரியர் தலையிட்டுப் பேசுகிறார். வாசகனுக்குச் சிலவற்றைச் சொல்லவேண்டும் என அவர் நினைக்கும்போது மட்டுமே அது நிகழ்கிறது. அது ஒரு நாவலுக்கு வேண்டியதே. ஆசிரியன் தன்னை முற்றாக மறைத்துக்கொண்டால் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கும்?”

“ஒரு விரிவான நாவல் ஓர் இடப் பின்புலத்தில் அமையவேண்டியுல்ளது. அந்தப் பின்புலத்தை நாவலாசிரியன்தான் சொல்ல வேண்டும்.அவள் பார்வை இடது பக்கம் திரும்பும்போது தலைவிரித்து கீழிறங்கி ஒற்றையாய்த் தொங்குகிறது ஒரு புளிய மரம்! அதன் நிழல்தான் குழந்தைகள் கில்லி, கெத்தே, நொண்டி, அச்சிக்காவின் ஆடுகளம். அவர்கள் போடும் குதூகலக் கூச்சல் ஊரெல்லாம் கேட்கும். சில சமயம் புளியம் பழத்துக்காக வீசும் கழிகள் சைக்கிளில் போவோர் தலையில் விழும்போது, விளையாடிய சிறார்கள் கல்லெறி பட்ட சிட்டுக்குருவிகள் போல் சிதறித் தப்பி ஓடிவிடுவார்கள். அப்போது அது குழந்தைகளற்று திடீரெனத் தற்காலிக மௌனம் பூண்டு நிற்கும். இப்போதோ, ஒரு நிரந்தர மௌனம்! அந்தப் புளிய மரத்துக் கிளைகளில் ஒன்றில் நள்ளிரவில் பேயுறங்கும் என்ற கதை குழந்தைகளிடையே ஏற்படுத்திய கிலி, இனி அர்த்தமற்றுப் போய்விடும். விழித்திருக்கும் உண்மைப் பேய்கள் எதுவென்று அடையாளம் காணமுடியாத மக்கள் இல்லாத பேயை புளியமரத்தில் உறங்கவிட்டிருந்தார்கள்! இந்தக் காட்சியை ஆசிரியரல்லாமல் வேறு யார் காட்ட முடியும்? இந்தப் பகுதியின் இறுதியில் “மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் பேய்க்கு மட்டும் என்ன வேலை?” என்ற ஒரு முத்தாய்ப்பை வேறு யார் வைக்க முடியும்?”

“மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் புண்ணியவான் மிக முக்கியமானவர். எழுதும் கலையை இடைவிடாது போற்றுவதுடன் நல்ல வாசிப்பின் மூலமாக அதனைக் கூர்மைப்படுத்திக்கொண்டு வளர்ந்தவர். “செலாஞ்சார் அம்பாட்” என்னும் இந்தப் புதிய நாவல் அவரின் உச்சப் படைப்பாக அமைகிறது. “சிவப்பின் பிரதிநிதியாக இருந்து அதன் சீரழிவு வரலாற்றின் ஒரு சிறு பகுதிதான் கருப்பு மையால் எழுதப்பட்ட “செலாஞ்சார் அம்பாட்” என்னும் இந்நாவல்” என அவர் கூறுவது மிகப் பொருத்தம்.”

“மலேசியத் தமிழர்களின் சமுக வரலாற்றின் ஓர் இருண்ட பகுதியை உயிர்ப்பிக்கும் இந்த நாவல் தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை.” இவ்வாறு ரெ.கார்த்திகேசு தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.