ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 29 – நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 30ஆம் தேதி, செபராங் ஜெயாவில் உள்ள சஃபிரா கண்ட்ரி கிளப்பில் காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில ஆண்டுப் பேராளர் மாநாடு இங்குள்ள மஇகா கிளைத்தலைவர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராக் மஇகா மாநாட்டில் ஆவேசப் பேச்சுகளும், அமளி துமளிகளும், களேபரங்களும் சூழ்ந்து கொண்டு மஇகாவின் தோற்றத்தைக் கெடுத்தது போல், பினாங்கு மாநில மஇகாவையும் தற்போது அரசியல் சர்ச்சைகளும், உட்கட்சிப் போராட்டங்களும் பேராளர்களின் உச்சகட்ட கோபக் கனல்களோடு மையம் கொண்டுள்ளன.
அமைதியான பேராக் மாநிலத்திலேயே இவ்வளவு தகராறு என்றால், ஏற்கனவே இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கும் பினாங்கு மஇகா மாநாட்டின் நிலைமை மேலும் மோசமாகலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இதனால், பழனிவேல் பினாங்கு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விடுவார் என்றும், பினாங்கு மாநாட்டை நடத்தப் போவது துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்தான் என்ற ஆரூடத்தையும் தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன.
நான்கு முக்கிய பிரச்சனைகள்
தற்போது நான்கு முக்கிய பிரச்சனைகள் பினாங்கு மாநில மஇகாவின் கிளை மற்றும் தொகுதித் தலைவர்களிடையே தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவைதான் பினாங்கு மாநில பேராளர் மாநாட்டிலும் தீப்பொறி பறக்கும் விவாதங்களாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலாவது, மாநிலத் தலைவர் எம்.கருப்பண்ணனின் தலைமைத்துவம் வேண்டாம் என அவருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து வேட்டை. நிறைய மஇகா கிளைகள் இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இரண்டாவது, காலஞ்சென்ற மாநிலத் தலைவர் வகித்திருந்த செனட்டர் பதவி – அவரது மரணத்திற்குப் பின்னர் பினாங்கு மாநிலத்திற்கு கொடுக்காமல் வேறு மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டது – அதுவும் சிலாங்கூர் மாநிலத்திற்கு மட்டும் அளவுக்கதிகமாக செனட்டர்கள் வழங்கப்பட்ட விவகாரம்.
இதனால், பினாங்கு மாநிலத்தை தேசியத் தலைவர் பழனிவேல் புறக்கணித்து விட்டார், அலட்சியப்படுத்துகின்றார் என்ற குமுறல் பேராளர்களிடையே பெருமளவில் பரவியுள்ளது.
மூன்றாவது, எதிர்க்கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு கருப்பண்ணன் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சி.
நான்காவது, எதிர்க்கட்சி வசம் இருக்கும் பினாங்கு மாநிலத்தில் எந்தவித மாநில அரசாங்க வாய்ப்புகளும், நிதி ஒதுக்கீடுகளும் இல்லாமல், பினாங்கு மாநில கிளைகளும், தொகுதிகளும் படும் அவதி. இந்தப் பிரச்சனையும் பினாங்கு மாநிலத்தில் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கும் பினாங்கு மஇகா
இது போன்ற அரசியல் சர்ச்சைகளால் தற்போது இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற பினாங்கு மஇகாவின் உட்கட்சிப் போராட்டங்கள் –
நாளை நடைபெறும் பினாங்கு மாநிலப் பேராளர் மாநாட்டில் ஆவேசமான, தீப்பொறி பறக்கும் விவாதங்களாக பேராளர்களிடையே உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
இதனால், பேராக் மாநாட்டை விட கூடுதலான பூகம்ப அதிர்ச்சிகள் நாளைய பினாங்கு மாநில மாநாட்டு மண்டபத்தை அதிர வைக்கலாம் என்ற பேச்சு பினாங்கு மாநிலக் கிளைகளிடையே வேகமாகப் பரவி வருகின்றது.