திரிபோலி, செப்டம்பர் 2 – லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அது தொடர்பான காணொளி ஒன்றையும் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
லிபியாவில் ‘லிபியாவின் விடியல்’ என்ற அமைப்பு தனியாட்சிக்காக கடும் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றது. அந்த அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றினர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டது தொடர்பான காணொளிகளைக் பார்த்தோம். எனினும் அங்கு உள்ள உண்மை நிலவரம் குறித்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை.”
“திரிபோலியில் ஆயுதக் குழுக்களிடையே சண்டை நடைபெற்று வருவதால் அங்கிருந்த தூதரக அதிகாரிகள் வல்லெத்தொ, மால்டா ஆகிய நகரங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் பத்திரமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தூதரகத்தில் வேறு அதிகாரிகள் யாரேனும் உள்ளனரா, அவர்களின் நிலை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.