சென்னை, செப்டம்பர் 3 – எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வெள்ளிவிழா சென்னையில் நடந்தது. எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா நடித்து 1965–ம் ஆண்டில் திரைக்கு வந்த படம், ‘ஆயிரத்தில் ஒருவன்.’
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பி.ஆர்.பந்துலு இயக்கிய அந்த படம், அப்போதே 100 நாட்களை தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 49 வருடங்களுக்குப்பின், அந்த படம் புதிய தொழில்நுட்பங்களுடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.
மறுவெளியீட்டில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இதையொட்டி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
அந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொண்டார்கள். இருவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
விழாவில் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், விவேக், நடிகை ராஜஸ்ரீ, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, முன்னாள் தலைவர் கே.முரளிதரன், இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், இயக்குநர் பி.வாசு, பிலிம் சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், பட அதிபர்கள் கே.ராஜன், சாமிநாதன்,
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம், உடையலங்கார நிபுணர் முத்து, மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
விழாவையொட்டி ‘‘திவ்யா பிலிம்ஸ்’’ ஜி.சொக்கலிங்கத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.