டோக்கியோ, செப்டம்பர் 3 – கடலிலும், தரையிலும் இறங்கக் கூடிய போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், எந்தவொரு இராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பதில்லை என ஜப்பான் உறுதி பூண்டு இருந்தது.
எனினும் தற்போது முதல் முறையாக தனது போர் தளவாடத்தை இந்தியாவிற்கு விற்க அந்நாடு முன் வந்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் ஏற்பட்ட சந்திப்பின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர் விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது இந்த ஒப்பந்தத்தின் தனிச் சிறப்பாகும்.
4 இன்ஜின்கள் கொண்ட இந்த போர் விமானம் தரையிலும், கடலிலும் ஓடுதளப் பாதை இல்லாத இடத்திலும் கூட தரையிறங்கக் கூடியது. யுஎஸ்-2 என்ற இந்த நவீன போர் விமானம் ஒரு நேரத்தில் 30 பேரையும், 18 டன் எடையையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது.
சுமார் 7,500 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய கடலோரப் பகுதியை கண்காணிக்கவும், அந்தமான், லட்சத் தீவுகள் உள்ளிட்ட சிறு தீவுகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த போர் விமானம் பயன்படும் என்று இந்தியத் தரப்பில் கூறப்படுகின்றது.
இந்த போர் விமானம் இந்தியாவிலேயே தயாராக உள்ளதால், இதற்கான தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவியையும் ஜப்பான் அரசு செய்ய உள்ளது.