கோலாலம்பூர், செப்டம்பர் 15 – எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசிய பயணிகளில் மேலும் 4 மலேசியப் பயணிகளின் சடலங்கள் ஆம்ஸ்டர்டாமில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.
அவற்றுள் இரு சடலங்களை மலேசியா கொண்டு செல்ல நெதர்லாந்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மற்ற இரு சடலங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான நடைமுறைகள் தற்போது நடந்து வருவதாவும் அவர் கூறினார்.
“இதே விபத்தில் பலியான டம்பி ஜியியின் இரு பிள்ளைகளான முகமட் அப்சல் டம்பி (17 வயது) மற்றும் மார்ஷா அஸ்மீனா டம்பி ஆகிய இருவரது சடலங்களை மலேசியா கொண்டு செல்லவே தற்போது அனுமதி கிடைத்துள்ளது,” என்றார் லியோவ்.
டம்பி ஜியியின் நல்லுடல் செப்டம்பர் 9 -ம் தேதி மலேசியா கொண்டு வரப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் அடையாளம் காணப்பட்ட மற்ற இரு சடலங்களும் விமானப் பணியாளர்கள் ஷேக் முகமட் நூர் மெஹ்மூட் (44 வயது), மற்றும் விமானப் பயணி லியூ யாவ் சீ (38 வயது) என்றார் லியோவ்.
“முதலில் இரு நல்லுடல்கள் அல்லது மொத்தமாக 4 நல்லுடல்களும் மிக விரைவில் மலேசியா கொண்டு வரப்படும்,” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ லியோவ் தெரிவித்தார்.
செப்டம்பர் 9 -ம் தேதி வரையிலான காலகட்டம் வரை, எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசிய பயணிகளில் 35 பேரின் சடலங்கள் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா கொண்டு வரப்பட்டுள்ளன.