ஸ்டாக்ஹோம், அக்டோபர் 10 – இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பிரான்சை சேர்ந்த பேட்ரிக் மோடியானோ (படம்) பெற்றுள்ளார். 69 வயதான இவர் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை வாசகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இந்தப் பரிசு கிடைத்துள்ளது.
தனது நினைவில் பதிந்துள்ள எண்ணற்ற விஷயங்களை தனது படைப்பாற்றலின் வழி அவர் வெளிப்படுத்தியுள்ள விதமும், மனித வாழ்க்கையும் அதனுடன் சார்ந்த பணிகள் குறித்த அம்சங்களையும் அவர் எடுத்துக் கூறியுள்ள விதமும் அபாரமானது என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 1978ஆம் ஆண்டு எழுதிய ‘மிஸ்ஸிங் பெர்சன்’ என்ற நாவலுக்காக பெருமைமிக்க ப்ரிக்ஸ் கோன்கோர்ட் பரிசை பெற்றார் மோடியானோ. இதுவரை பிரெஞ்சு மொழியில் நாற்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
இவரது பெரும்பாலான படைப்புகள் நினைவு, அடையாளம் மற்றும் குற்ற உணர்ச்சி
ஆகியவற்றை மையப்படுத்தியே இருக்கும். இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே மோடியானோ பரவலாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்காகவும் சில புத்தகங்களை எழுதியுள்ள மோடியானோ கடந்த 1974ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரெஞ்சு திரைப்படத்திலும் பணியாற்றி உள்ளார். கடந்த
ஈராயிரமாவது ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் பணியாற்றினார்.
ஊடகவியலாளர்களிடம் மிக அபூர்வமாகவே பேசக்கூடிய மோடியானோ கடந்த 2012ல்
சிறந்த ஐரோப்பிய இலக்கியத்திற்கான ஆஸ்திரிய அரசின் விருதைப் பெற்றார்.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின்
நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை மிகத் தத்ரூபமாக
தனது படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தியதற்காக மோடியானோவுக்கு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டுள்ளது.