காஷ்மீர், அக்டோபர் 14 – இந்தியா பாகிஸ்தான் எல்லையில், கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந்த இரு நாட்டு இராணுவ வீரர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு வட்டார காவல் துறையின் உயர் அதிகாரி ராஜேஸ் குமார் கூறுகையில், “தற்போது வரையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்படவில்லை. எல்லையில் அமைதி நிலவுகின்றது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:- “மக்கள் மற்றும் இராணுவத்தின் மனவலிமையை மிக அதிகமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதில் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு துணையாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இப்போதும் கடந்த 1–ம் தேதி முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.