கொழும்பு, நவம்பர் 6 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, அமைதிப்பணியில் ஈடுபட இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், இலங்கை அமைச்சருமான கருணா பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியதாவது: “இந்திய அரசு 1987-ம் ஆண்டு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமைதிப்படை ஒன்றை இங்கு அனுப்பியது. சுமார் 3 ஆண்டுகள் இலங்கையில் இருந்த இந்திய அமைதிப்படை தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், தமிழர்களை கொன்று குவித்தும் வந்தது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.”
“அதேபோல், சாதாரண இயக்கமாக இருந்த விடுதலைப்புலிகள், பிரேமதேசா இலங்கை அதிபராக பொறுப்பேற்றவுடன் பெரும் வளர்ச்சியை எட்டியது. அவர், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மீனவர்கள் பற்றி கருணா கூறுகையில், “இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர் திறன்பட தடுத்து நிறுத்தி வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா, பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறினார். 2004-ம் ஆண்டு தனி இயக்கம் துவங்கிய கருணா, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து துணை அமைச்சராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.