புத்ரா ஜெயா, நவம்பர் 6 – கே.எல்.ஐ.ஏ. – 2 விமான நிலைய வரிகள் மற்றும் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொள்ளாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வை அனுமதிக்கும்படி மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து தனது அமைச்சுக்கு கோரிக்கை வந்திருப்பதாக வெளியான தகவலையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
“இது போன்ற எத்தகைய கோரிக்கையும் என்னிடம் அளிக்கப்படவில்லை. மேலும் விமான நிலைய வரிகள் மற்றும் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நிச்சயமாக நாங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
இவை அனைத்தும் ஆரூடங்கள் மட்டுமே. இந்த விவகாரத்தை திசை திருப்ப ஒருசிலர் மேற்கொண்டுள்ள முயற்சி இது” என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் லியோவ்.
முன்னதாக கே.எல்.ஐ.ஏ. – 2ன் விமான நிலைய வரிகள் மற்றும் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுமா? என நாடாளுமன்றத்தில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பயணிகள் கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியானது.
இதனால் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது செலுத்தும் 6 ரிங்கிட்டுக்கு பதிலாக 9 ரிங்கிட்டும், வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் 32 ரிங்கிட்டுக்கு பதிலாக 65 ரிங்கிட்டும் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்பட்டது.