கோலாலம்பூர், நவம்பர் 6 – பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் அருகே வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வதாகக் கூறப்படும் எப்3 கேபிடல் நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இதற்கு முன்னர் ஆசிரம நிர்வாகக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்துள்ளார் என்ற தகவல் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.விக்னேஷ் நாயுடு என்ற அந்த நபர் கடந்த ஜனவரி 29 -ம் தேதி, ஆசிரம நிர்வாகக் குழுவில் இணைந்து கெளரவ பொருளாளர் பதவி வகித்துள்ளார். அதே வேளையில் எப்3 கேபிடல் நிறுவனத்திலும் இயக்குநராகப் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு, ஏப்ரல் 2 -ம் தேதி, எப்3 கேபிடல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்ட அவர், அந்நிறுவனத்தில் கணிசமான பங்குதாரராகவும் இருந்துள்ளார் என தி எட்ஜ் ஃபினான்சியல் டெயிலி செய்தி வெளியிட்டுள்ளதாக தி மலேசியன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், எப்3 கேபிடலில் குவா ஹுவாட் ஹாக் மற்றும் லோ கிம் லான் ஆகிய இருவரும் தலா 1 மில்லியன் ரிங்கில் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு அந்நிறுவனத்திற்குக் கிடைத்த லாபம் 700,000 ரிங்கிட் என்று கூறப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் ஆசிரமத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், விக்னேஷ் தனது கெளரவ பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.