கோலாலம்பூர், நவம்பர் 20 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், அவர் பதவி விலகுவதே நல்லது என்று அக்கட்சியின் வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி தெரிவித்துள்ளார்.
பழனிவேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுற்றுலாத்தளமான கேமரான மலைத் தொகுதியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு, ஒரு தலைவராக அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகாங் சுல்தான், சுல்தான் அகமட் ஷா குற்றம் சாட்டியிருப்பதை சுட்டிக்காட்டி இந்த கருத்தை வேள்பாரி கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பழனிவேல், பெர்தாம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்கும் இதுவரை எந்த ஒரு தீர்வையும் காணவில்லை என்றும், கடந்த ஆண்டு அதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் மரணமடைந்தனர் என்றும் சுல்தான் குற்றம் சாட்டியுள்ளதாக வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.
பழனிவேலைக் கண்டித்து பகாங் சுல்தான் கூறியிருக்கும் செய்தியை இன்று நாளிதழ்களில் படிக்கும் போது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறிய வேள்பாரி, பழனிவேல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.