பெய்ரூட், பிப்ரவரி 4 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு காணொளியில் (வீடியோ) அவர்கள் பிணையாகப் பிடித்து வைத்திருந்த ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட காட்சி இடம் பெற்றிருந்தது எனவும், வெளிநாட்டு பிணைக் கைதிகளிலேயே மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் இது என்றும் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர் ரகத் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 22 நிமிட காணொளியில், கடந்த டிசம்பரில் பிணையாகப் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி மாஸ் அல்-கஸ்ஸாஸ்பே (படம்) ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, தீப்பிழம்புகளுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
26 வயதுடைய அந்த விமானியின் மரணத்தை ஜோர்டானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியது என்றாலும் அந்த காணொளியின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பூமியே நடுங்கும் வண்ணம் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அனைத்து ஜோர்டானியர்களையும் பாதித்துள்ள அல்-கஸ்ஸாஸ்பேயின் மரணத்தை அப்படியே விட்டு விடமாட்டோம் என்றும் ஜோர்டானிய அரசு அறிவித்துள்ளது.
அல்-கஸ்ஸாஸ்பே கடந்த ஜனவரி 3ஆம் தேதியே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஜோர்டானிய அரசு தொலைக்காட்சி அறிவித்தது. தற்போது ஜோர்டானிய சிறையில் வெடிகுண்டு தாக்குதலுக்காக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி விடுதலை செய்யப்பட்டால், அல்-கஸ்ஸாஸ்பேயும் விடுதலை செய்யப்படுவார் என ஐஎஸ்ஐஎஸ் அறிவித்திருந்தது.
அந்த ஈராக்கிய தீவிரவாதி இன்று புதன்கிழமை தூக்கிலிடப்படுவார் என்றும் ஜோர்டான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ஜோர்டானிய பிணைக் கைதியின் கொலைக்காக கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.