Home நாடு 102 தொகுதிகள் – 2000க்கும் மேற்பட்ட கிளைகள் – தலைவர்கள் ஆதரவோடு களம் இறங்கும் சுப்ரா!

102 தொகுதிகள் – 2000க்கும் மேற்பட்ட கிளைகள் – தலைவர்கள் ஆதரவோடு களம் இறங்கும் சுப்ரா!

847
0
SHARE
Ad

Dr Subra after announcing candidacyகோலாலம்பூர், பிப்ரவரி 16 – கடந்த வாரம் நடந்த தனது மகளின் திருமண விருந்து வரவேற்பில் பிரதமர், துணைப் பிரதமர் முன்னிலையில் உரையாற்றிய, மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இல்லறம் குறித்த சில திருக்குறள் வாசகங்களை மேற்கோள் காட்டி, திருக்குறளை தனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக பின்பற்றுகின்றேன் எனக் கூறியிருந்தார்.

அந்த திருக்குறளில் ஒரு குறளான “எண்ணித் துணிக கருமம்” என்ற குறளுக்கு ஏற்பவே முடிவெடுத்திருப்பார் போலும்!

காரணம், இதுவரை அவர் வழங்கிய உரைகளிலேயே சிறப்பானது என்று கருதும் அளவுக்கு, அடுக்கடுக்காக, ஏன் தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியில் குதிக்கும் நிலைமை ஏற்பட்டது என்பதை குழுமியிருந்த மஇகா தலைவர்கள் மத்தியில் அவர் எடுத்துக் கூறியபோது, வள்ளுவனைப் பின்பற்றும் அவர் நன்கு எண்ணிப் பார்த்துதான், சிந்தித்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

#TamilSchoolmychoice

அதே வேளையில், தேர்தல் என்று வந்தால் எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதும் முக்கியம் என்பதால், “எண்ணித் துணிக கருமம்” என்ற குறளின் மற்றொரு பொருளுக்கேற்ப, தனக்கு எத்தனை தலைவர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதையும் கணக்கெடுத்துவிட்டுத்தான் களத்தில் குதிக்கின்றார் என்பதும் புலப்பட்டது.

காரணம், மஇகா தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ பழனிவேலை எதிர்த்து, தாம் போட்டியிடப் போவதாக நடப்புத் துணைத் தலைவரான  டாக்டர் சுப்ரமணியம் பலத்த கரகோஷத்துடன் அறிவித்தபோது மேடையில் 102 மஇகா தொகுதித் தலைவர்கள் தங்களின் பகிரங்க ஆதரவை திட்டவட்டமாக, பகிரங்கமாக தெரிவிக்கும் வகையில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர்.

IMAG1513கட்சியினரின் நம்பிக்கையை இழந்து விட்ட பழனிவேல்

கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பழனிமேல் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக சுப்ரா தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள எதிர்வரும் கட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பழனிவேல் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டத்தோ சுப்ரமணியமும் களத்தில் குதிப்பதால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மஇகாவில் தலைவர் பதவிக்கான நேரடிப் போட்டி உருவாகி, அதில் இன்னொரு சுப்ரமணியம் குதிக்கும் சூழ்நிலை மஇகாவில் உருவாகியுள்ளது.

1989ஆம் ஆண்டில் நடந்த தேசியத் தலைவர் தலைவர் தேர்தலில் அன்றைய தேசியத் தலைவர் ச.சாமிவேலுவை எதிர்த்து அன்றைய துணைத் தலைவர் (டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியம் போட்டியிட்டு, தோல்வியடைந்தாலும், கடுமையான போட்டியை வழங்கினார். ஏறத்தாழ 48 சதவீத ஆதரவு வாக்குகளையும் பெற்றார்.

ஆனால் அப்போது, ஒரு கிளையின் 22 செயலவை உறுப்பினர்கள் தேசியத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இந்த முறையோ, கிளைகளின் தலைவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

Dr Subra garlanded after candidacy2,000க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் ஆதரவு

ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களும் நேற்று நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். “மஇகாவின் இன்றைய நிலைமையும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான இந்தக் கூட்டத்தில் மற்ற மஇகா தலைவர்களும் உரையாற்றினர்.

தொகுதித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அம்பாங் பி.வில்சன், பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ராஜூ ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர்.

தமது ஆதரவாளர்களுடான சந்திப்பின் போது விளக்கங்களைத் தந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் சுப்ரமணியம்.

அப்போது இந்திய சமுதாயம் மற்றும் மஇகா உறுப்பினர்களின் நலன் கருதியே தாம் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.
“மஇகா தற்போதுள்ள நிலையைக் கண்ட பிறகே இம்முடிவுக்கு வந்துள்ளேன். கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பழனிவேல் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். கட்சி விவகாரத்திற்கு தீர்வு காண அவர் தவறிவிட்டார்,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.

அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மஇகா உதவித் தலைவர் டத்தோ சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா, மகளிர் பிரிவு தலைவர் மோகனா ஆகியோரும் உடனிருந்தனர்.

மஇகாவின் இளைஞர், மகளிர் பகுதித் தலைவர்கள் – புத்ரா, புத்ரி தலைவர்கள் – நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேரின் ஆதரவு – 5 செனட்டர்களில் 3 பேரின் ஆதரவு – 5 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேரின் ஆதரவு – இப்படியாக கட்சியின் எல்லா நிலைகளிலும் வலுவான அடித்தள ஆதரவையும் பெற்றுதான் சுப்ரா தேசியத் தலைவர் தேர்தலில் குதிக்கின்றார் என்பதை நேற்றைய கூட்டம் மறு உறுதிப்படுத்தியது.

மாறாக, மீண்டும் மீண்டும் மத்திய செயலவை உறுப்பினர்களை நியமித்து அவர்களின் ஆதரவில்தான் கட்சியை நடத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு பழனிவேல் தள்ளப்பட்டிருக்கின்றார் என்பதும் மஇகாவில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

-இரா.முத்தரசன்