புதுடெல்லி, பிப்ரவரி 16 – பன்றிக் காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஏராளமானோர் பன்றிக் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
அங்கு கடந்த 3 நாட்களில் 11 பேர் இறந்துள்ளனர். ஜெய்ப்பூர், ஜோத்பூரில் தலா 3 பேரும், அஜ்மீரில் 2 பேரும், நகார், பாரத்பூர், கோட்டாவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இதன் மூலம் ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. குஜராத்தில் 136 பேர் இறந்துள்ளனர்.
தெலங்கானாவில் இந்தாண்டு 3,045 பேரிடம் பரிசோதிக்கப்பட்டதில் 1,006 பேர் பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளாவிலும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் நேற்று கூறுகையில், ‘பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுவரை நாடு முழுவதும் 485 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்காகும்”.
“அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறோம்‘ என்றார். ஆனாலும், பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மத்திய சுகாதாரத் துறை பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 937 பேர் பாதிக்கப்பட்டு 218 பேர் பலியாகினர். இந்தாண்டு ஒன்றரை மாதத்திலேயே 485 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.