Home அவசியம் படிக்க வேண்டியவை “இணைமதியம்” 30 ஆண்டு கால முரசு அஞ்சலின் வரலாற்று விழா! செல்லினம்-செல்லியல் மேம்பாடுகள் காணும்...

“இணைமதியம்” 30 ஆண்டு கால முரசு அஞ்சலின் வரலாற்று விழா! செல்லினம்-செல்லியல் மேம்பாடுகள் காணும் தமிழ்த் தொழில்நுட்ப விழா!

1070
0
SHARE
Ad

MURASU 30 years 600 x 600கோலாலம்பூர், பிப்ரவரி 17 – ‘முரசு’ – இது 1985ஆம் ஆண்டில் தமிழ் அச்சுத் துறையில் இருந்த சிக்கல்களைக் களையும் நோக்கில் ஓர் ஆர்வத்தின் பேரில் மலேசியாவில் உருவாக்கப் பட்டக் கணினி மென்பொருள்.

இன்று, ‘அஞ்சல்’ ‘செல்லினம்’ ‘செல்லியல்’ எனும் பெயர்களில் கணினித் தமிழை உலகெங்கும் உள்ளத் தமிழ் ஆர்வலர்களின் இல்லங்களுக்கும், இதயங்களுக்கும் கொண்டு சென்று, தமிழ்த் தொழில்நுட்பத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘இணைமதியம்’ எனும் தமிழ்த் தொழில்நுட்ப வரலாற்று விழா எதிர்வரும் மார்ச்14ஆம் நாள், சனிக்கிழமை, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலை ஆலய மண்டபத்தில் (டெம்பள் ஆப் பைன் ஆர்ட்ஸ்) மாலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

முப்பது ஆண்டுகளாக ஒரே குறிக்கோளைக் கொண்டு காலத்திற்கேற்ற மேம்பாடுகளைக் கண்டுவரும் கணினி மென்பொருள்கள் மிகவும் குறைவு. அதிலும் தமிழ் மென்பொருள்கள் காண்பதற்கு அரியனவாகும்.

கறுப்புத் திரைகளில் பச்சை எழுத்துகளை மட்டுமே கண்ட கணினிகளில் உருவாக்கம் பெற்று இன்று திறன்பேசிகள் உட்பட்டக் கையடக்கக் கருவிகளிலும் மற்ற மொழிகளோடு போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு முரசு அஞ்சல் தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு தொலைநோக்குச் சிந்தனையோடு அதன் தொடக்ககால அடிப்படை அமைக்கப் பட்டுள்ளதனை இந்த வெற்றி  மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

muthu-nedumaranஇதனை நினைவுகூர்ந்த முரசு மென்பொருளின் உருவாக்குநரான முத்து நெடுமாறன் (படம்), “1985ஆம் ஆண்டு ஒரு தமிழ் நிகழ்ச்சியின் நினைவு மலரை அச்சிடுவதற்கு நாங்கள் பட்டப் பாடு இதற்கெல்லாம் ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற விடாமுயற்சியில் என்னைத் தள்ளியது. அதனைத் தொடங்கிய போது பக்கங்களை அச்சிடுவதற்காக வடிவமைக்கும் நோக்கத்தோடு நின்றுவிடவில்லை. ‘அணுவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்’ என்ற சிந்தனையோடும் தமிழைக் கணினியில் எங்கெல்லாம் புகுத்த முடியுமோ அங்கெல்லாம் புகுத்திவிடவேண்டும் என்ற எண்ணத்தோடும்  தொடங்கினேன். அந்த முயற்சியின் முதல் வரவுதான் ‘முரசு’  எனும் மென்பொருள். அந்த எண்ணம் இன்றும் கிஞ்சிற்றும் குறையவில்லை. ஒரே ஒரு வேறுபாடுதான் – அன்று புகுத்துவதனைப் பற்றிச் சிந்தித்தேன்; இன்று வெளிக்கொணர்வதனைப் பற்றிச் சிந்திக்கிறேன்” என்று கூறினார்.

எத்தனையோ தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், தரத்திலும், தொடர்ச்சியான மேம்பாடுகளைக் கொண்டுவருவதிலும் முரசு அஞ்சல் இன்று வரை உலகின் சிறந்த மென்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

உலகத் தரம்வாய்ந்த நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், எச்.டி.சி போன்றவை முத்து நெடுமாறன் உருவாக்கிய உள்ளீட்டு முறைகளையும் எழுத்துருக்களையும் அவரவர் இயங்குதளங்களில் இயல்பாகச் சேர்த்திருப்பதே இதற்குச் சான்றாக அமைகிறது.

முப்பதாண்டுகள் நிறைவைக் காணும் முரசு அஞ்சலில், குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் சேர்க்கப்பெற்று, கணினித் தமிழ்ப் பயன்பாட்டை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் புதிய பதிப்பு ஒன்றும் இந்த 30ஆம் ஆண்டு வரலாற்றுவிழாவில் வெளியிடப்படவுள்ளது.

செல்லினம்

sellinam-promo-1024x500கணினிகளின் பயன்பாட்டைவிடக் கையடக்கக் கருவிகளின் பயன்பாடு இன்று கூடிவிட்டது. தொழில்நுட்ப உலகில் இதுபோன்ற மாற்றங்கள் இயல்பானவையே. மாற்றங்கள் வருமுன் அவற்றை முன்னறிந்து அவற்றிற்கேற்ற முன்னேற்றங்களை அறிமுகப் படுத்துவதில் முரசு நிறுவனம் தயக்கம் காட்டியதில்லை.

இன்று புழக்கத்தில் உள்ள திறன்பேசிகள் அறிமுகம் கண்ட சில ஆண்டுகளுக்கு முன்னரே ‘செல்லினம்’ எனும் குறுஞ்செயலியை முத்து நெடுமாறன் உருவாக்கி வெளியிட்டார்.

2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று பொதுப் பயனீட்டிற்காகச் சிங்கப்பூரில் முதன் முதலில் வெளியிடப்பெற்ற செல்லினம், இவாண்டில் பத்தாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.

குறுஞ்செய்திகளுக்காக மட்டுமே முதன் முதலில் வெளிவந்த செல்லினம், இன்று முகநூல், வாட்செப், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களிலும், கையடக்கக் கருவிகளில் தமிழிலேயே உள்ளிட்டுத் தகவல் பெறுவதிலும், இன்னும் எண்ணற்ற செயலிகள் தமிழிலேயே இயங்குவதற்கும் வாய்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழுக்காக உருவாக்கப் பெற்ற செல்லினத்தின் தொழில்நுட்பம், மற்ற இந்திய இந்தோ-சீன மொழிகளுக்கும் மலேசிய மொழியின் மற்றொரு வரிவடிவமான ‘ஜாவி’யை எழுதுவதற்கும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கையடக்கக் கருவிகளில் தமிழை உள்ளிடுவதை மேலும் எளிமையாக்கவும், இப்போதைய பதிப்பில் உள்ள பரிந்துரைப் பட்டியல் வசதியை மேம்படுத்தவும் புதிய மாறுதல்களை செல்லினத்தின் அடுத்த பதிப்பு காணவுள்ளது.

செல்லினத்தின் புதிய பதிப்பின் செயல்முறைக்காட்சியும் விழாவில் ஓர் அங்கமாக இடம்பெறவுள்ளது.

புதிய முகப்போடு செல்லியல்

Selliyal Logo 440 x 215முத்து நெடுமாறன் தொழில் நுட்ப ஆலோசகராகவும், வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு உருவாக்கிய இணையச் செய்தித் தளம் ‘செல்லியல்’.

அறிமுகம் கண்டது முதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய ஊடகத் துறையில் செல்லியல் தனி முத்திரை பதித்திருப்பதோடு, மலேசியாவிலேயே இணையம், மற்றும் கையடக்கக் கருவிகளில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவரும் ஒரே ஊடகத்தளம் என்ற சிறப்பையும் செல்லியல் பெற்றுள்ளது.

அது மட்டுமன்றி, செய்திகளை உடனுக்குடன், உலகெங்கிலும் உள்ள பயனர்களின் திறன்பேசிகளுக்குக் குறுஞ்செய்தி வடிவில் தமிழிலேயே – அதுவும் இலவசமாகக் — கொண்டு சேர்க்கும் அதி நவீன தொழில் நுட்ப அம்சத்தையும் வெற்றிகரமாக செல்லியல் செயல்படுத்தி வருகின்றது.

செல்லியலின் இணை நிருவனரான இரா.முத்தரசன் அதன் நிருவாக ஆசிரியராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகின்றார்.

செல்லியல் தளமும் தற்போது பல்வேறு முனைகளில், தொழில் நுட்ப அம்சங்களிலும், முகப்பு, உள்ளடக்கம், போன்ற அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

Murasu Launch logo vertical இந்தப் புதிய மேம்பாடுகளின் அறிமுகமும் இணைமதியம் வரலாற்று விழாவில் முக்கிய அங்கமாகத் திகழவிருக்கின்றது.

இன்று உலகத் தமிழர்களின் வாழ்விலும், கணினி மற்றும் இணைய உலகில் தமிழ் மொழியில் தவிர்க்க முடியாத முக்கிய தளங்களாக – களங்களாக – உருமாறிவிட்ட முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் ஆகிய இவை மூன்றும் ஒரு சேர – ஒரே மேடையில் அரங்கேறும் சாதனை விழாவாக,

தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் – கணினித் தமிழை அடுத்த கட்டத்திற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திண்ணமான நோக்குடன், வெற்றி விழாவாக முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு விழா கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

ஆகவே, உங்களின் நாட்குறிப்பில் இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள், சனிக்கிழமை, மார்ச் 14ஆம் தேதியை!

மாலை மணி 7.00 முதல் இரவு 9.00 மணிவரை கணினித் தமிழின் மேன்மையை உணர – இணையத் தமிழ் மழையில் நனைய – உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!

மற்ற விவரங்கள் விரைவில்!