சென்னை, மார்ச் 3 – சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கை விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி திரையரங்கை வாங்குவதாக தெரிகிறது.
54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி திரையரங்கம். சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்த உமாபதிக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் என்ற திரையரங்கமும் இருந்தது.
1962-ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து சிவாஜிகணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
2005-ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அங்கு ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் 800-நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.
சாந்தி திரையரங்கத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் 4 நவீன திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இதனை நிரூபிக்கும் வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு இன்று அறிவித்துள்ளார்.
இந்த பேட்டியின் போது ராம்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி திரையரங்கை வாங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.