கோலாலம்பூர், மார்ச் 20 – எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் குடும்பத்தார் இழப்பீட்டுத் தொகையைப் பெற தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹி லாய் சியான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள் மட்டுமே இறுதி இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
“இறுதி மற்றும் முழு இழப்பீட்டு தொகை என்பது ஒவ்வொரு பயணியின் குடும்பத்தாரும் எதிர்கொள்ளக் கூடிய தனிப்பட்ட இழப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.இழப்பீட்டுத் தொகைக்கான மதிப்பீடு 1999 மான்ட்ரியல் மாநாட்டில் வகுக்கப்பட்ட சட்டப்பூர்வ கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இதுவரை 4 பயணிகளின் குடும்பத்தார் மட்டுமே இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு தயாராக உள்ளனர்,” என்று லியோவ் தெரிவித்துள்ளார்.
எம்எச்17 விமானப் பயணிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகையில் முன்பணமாக வெ.1.85 லட்சம் அளித்துள்ளது மாஸ். இதுவரை 158 பயணிகளின் குடும்பத்தாருக்கு வெ.28.44 மில்லியன் தொகையை காப்பீட்டு நிறுவனங்களின் வழி மாஸ அளித்துள்ளது.