Home நாடு ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் கைது!

‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் கைது!

670
0
SHARE
Ad

The-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர், மார்ச் 30 – கடந்த வாரம் ‘தி மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தலைமை நிர்வாக ஆசிரியர்களை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

நிர்வாக ஆசிரியர் லியோனெல் மோரியாஸ், மலாய் மொழி செய்திப் பிரிவின் தலைமை ஆசிரியர் சுல்கிப்ளி சுலோங் மற்றும் மலாய் மொழி செய்தி ஆசிரியர் அமின் இஸ்கண்டார் ஆகியோர் விசாரணைக்காக டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விசாரணை முடியும் வரை அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் ‘தி மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், ஷியாரியா நீதிமன்றத்தில் செய்யப்பட்ட ஹூடுட் சட்டதிருத்தத்தை மார்ச் 11-ம் தேதி நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டில் மன்னர்கள் அனைவரும் நிராகரித்தனர் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மாநாட்டில் மலேசியாவின் அனைத்து மாநில மன்னர்கள் அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த வியாழக்கிழமை, கிளந்தான் ஹூடுட் தொடர்பான கட்டுரையை மறுத்து ஆட்சியாளர்கள் சார்பில் டத்தோஸ்ரீ சையத் டேனியல் சையத் காவல்துறையில் புகார் அளித்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் படி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.