கோலாலம்பூர், ஏப்ரல் 1 – ‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பில் மலேசியாவின் மற்ற செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 செய்தியாளர்கள், நேற்று டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு முன்பாக கூடி, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மஞ்சள் ரிப்பன் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ‘தி மலேசியாகினி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறிய அவர்கள், “எங்களில் ஒருவரை கைது செய்வது அனைவரையும் கைது செய்வது போன்றது” என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 7 மணியளவில் டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு முன்பாக கூடிய அவர்கள், இரவு 8.20 மணியளவில் 3 நிர்வாக ஆசிரியர்கள் விடுதலை செய்யப்படும் வரை காத்திருந்தனர் என்றும், அம்மூவரும் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்தவுடன் பலத்த கரவொலி அளித்து அவர்களை வரவேற்றனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.