கோலாலம்பூர், ஏப்ரல் 1 – அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்க கோரி அவரது குடும்பம் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 வருட சிறை தண்டனையை அனுபவித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தொடர்வது உறுதியாகியுள்ளது.
எனினும், மனு நிராகரிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அன்வார் மற்றும் அவரது மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில், மகள்கள் நூருல் இசா அன்வார் மற்றும் நூருல் நூகா அன்வார் ஆகியோர் பெறவில்லை என்று கூறப்படுகின்றது.
இது குறித்து அன்வாரின் வழக்கறிஞர் லத்தீபா கோயா கூறுகையில், அரச மன்னிப்பு நிராகரிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் மன்னரிடமிருந்து அன்வாரின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரத்தில், அரச மன்னிப்பு விசாரணை குழு அன்வாரின் மனுவை சிறைச்சாலை சட்டம் 1995-ன் படி, சிறைச்சாலை விதிமுறை 113-ன் கீழ் நிராகரித்துள்ளனர். விதிமுறை 113 என்பது ஒருவர் தனக்கு அரச மன்னிப்பு கேட்டு விண்ணப்பிப்பதாகும். என்றாலும், அன்வாரின் குடும்பம் விதிமுறை 113-ன் கீழ் மன்னிப்பு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. எனவே இதில் சில சர்ச்சைகள் உள்ளன. அதனால் அரச மன்னிப்பு விசாரணை குழுவின் செயலாளரும், பிரதமர் துறை இலாகாவின் சட்டவிவகாரங்களின் தலைமை இயக்குநருமான நூர்ஷியா அர்சாத்திடம் இந்த முடிவு குறித்து அன்வாரின் குடும்பம் கேள்வி எழுப்பியுள்ளனர்” என்று லத்தீபா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து தாங்கள் விண்ணப்பித்து வந்ததாகவும், ஆனால் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமட் அந்த விண்ணப்பத்தை, நூர்ஷியா அர்சாத்தின் முடிவின் அடிப்படையில் நிராகரித்துள்ளதாகவும் லத்தீபா தெரிவித்துள்ளார்.