கோலாலம்பூர் மார்ச் 4 – மக்களின் நம்பிக்கைக்கு மாறாக தேர்தல் ஆணைய விவகாரத்தில் பிரதமரின் தலையீடு இருக்காது என்று பிரதமர் அமைச்சகத்தைச் சேர்ந்த மந்திரியான மொஹாத் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது பிரதமரின் கையில் இல்லை என்றும் கூறினார்.
“மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் ஆணையர்களை நியமிப்பது பேரரசர் ஆவார். மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிக்கமுடியும். இதில் பிரதமரின் பங்கு எதுவும் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை” என்று கோலாலும்பூரில் இன்று நடைபெற்ற 13வது பொதுத் தேர்தல் பற்றிய பன்னாட்டு மாநாடு ஒன்றில் நஸ்ரி தெரிவித்தார்.
மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக அமைச்சர் என்ற முறையில் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை தாம் கவனித்து வருவதாகவும் அதில் பிரதமரின் தலையீடு இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.