கோலாலம்பூர், ஏப்ரல் 6 – பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரம விவகாரத்தில், அறங்காவலர் வாரியத்திற்கு எதிராக நேற்று சுமார் 1000 -த்திற்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தின் முன் ஒன்று கூடி கண்டன பேரணியை நடத்தியுள்ளனர்.
101 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தா ஆசிரமம் இருக்கும் இடத்தில் 32 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க ஆசிரம அறங்காவலர் வாரியம் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து இரண்டாவது முறையாக மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், நாளை நாடாளுமன்றத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி முன்னிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் பேசிய அமைச்சர் நஸ்ரி நாளை நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து இதற்கு ஒரு முடிவைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.