இந்திய கடற்படையின் நடவடிக்கையைக் கண்டு வியந்துள்ள 23 நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்களை ஏமனில் இருந்து மீட்கும்படி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் அதிபர் மன்சூர் ஹதி படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள், கிளர்ச்சிப் படைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனால் ஏமனில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர்முனையில் சிக்கித் தவித்து வந்து வந்தனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏமனின் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவித்த இந்தியர்கள் போர்க் கப்பல்கள் மூலம் ஜிபோத்தி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இரு தினங்களில் மூன்று விமானங்களில் மொத்தம் 670 இந்தியர்கள் நாடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவலில்: “’பெரும்பான்மையான இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏமனில் இருந்து தங்கள் நாட்டினரை மீட்குமாறு, இந்தியாவிடம் 23 நாடுகள் உதவி கோரியுள்ள தகவலையும் அவரே வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஏமன் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத் துறை, கடற்படை, விமானப் படை உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியை வெகுவாக பாரட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர் அல்லாத வெளிநாட்டினரும் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.