Home நாடு “தனக்கென தனி வரலாறு படைத்து சாதனை புரிந்தவர் ஜெயகாந்தன்” – பெ.இராஜேந்திரன் இரங்கல்

“தனக்கென தனி வரலாறு படைத்து சாதனை புரிந்தவர் ஜெயகாந்தன்” – பெ.இராஜேந்திரன் இரங்கல்

1004
0
SHARE
Ad

Jeyakanthanகோலாலம்பூர், ஏப்ரல் 9 –  மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்து ஆளுமைகளையும், அவரது பெருமைகளையும் எடுத்துக் கூறும் வண்ணம் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் இரங்கல் உரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இராஜேந்திரன் கூறியிருப்பதாவது:-

“உலகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனக்கென நிரந்தர இடத்தை தக்க வைத்து கொண்டவர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியத்திற்கு கிடைக்கும் உயரிய விருதான ஞான பீட விருதை அவர் பெற்றிருக்கிறார் என்பது அவரது ஆளுமைக்கு கிடைத்த மரி்யாதை. அதையும் கடந்து அவர் உண்மை ததும்பிய மனிதராக வாழ்ந்தார் என்பதுதான் அவருக்குரிய தனி சிறப்பு.”

#TamilSchoolmychoice

“எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதர்.கிமு.கிபி. என்றெல்லாம் கூறுகிறோம். சிறுகதை உலகத்தில் ஜெயகாந்தன் காலம் என்னும் ஒன்றை வாழும் காலத்திலேயே உருவாக்கியவர் ஜே.கே. பண்டிதர்களுக்கு சொந்தமானதாக இருந்த கவிதையை பாமரருக்கும் பரிமாறியவர் பாரதி என்று சொல்வார்கள் .அதை சிறுகதையில் சாத்தியமாக்கியவர் ஜெயகாந்தன்.”

“சேரி மக்களையும், சித்தாள்களையும், ரிக்‌ஷா ஓட்டிகளையும் கதாபாத்திரமாக்கி, அவர்கள் மொழியிலேயே அவர்களை பேச வைத்து பாமரனையும் வாசிக்க வைத்தவர்.தமிழ்ச் சிறுகதை உலகில் மிகப் பெரிய மாற்றம் நிகழ நெம்புகோலாய் திகழ்ந்தார்.”

“ஜெயகாந்தனைப்போல் எழுத வேண்டும் என எண்ணற்றவர்களை பேனா பிடிக்க வைத்தவர்.”

“பாரதி மீது தீராத பற்று கொண்டவர். ஜெயகாந்தனுடன் பேசி பழகியவர்களுக்குள் பாரதி மீதான புதிய பார்வையும் புதுப் புது தேடல்களும் நிச்சயம் நிகழும்.”Rajendran-writers-assoc

“இன்றைய தலைமுறை பாரதியை பார்க்கும் வாய்ப்பு வாய்க்காதவர்கள். என்னைப் பொறுத்தவரையில் ஜெயகாந்தன் வடிவத்தில் பாரதியை தரிசித்துள்ளேன்.”

“என் வீட்டில் இரண்டு முறை அவரை வரவேற்று உபசரித்ததும், தமிழகம் செல்லும்பொழுது அவரது வீட்டில் கூடும் விடியும் வரையில் கலையாமல் தொடரும் சபையில் கலந்து அவர் பேச்சியதை கேட்டு கேட்டு இன்புற்றதும் வாழ்வில் கிடைத்த பேராக கருதுகிறேன் .”

“ஜே கே அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால் காலங்களை கடந்தும் அவரை அவரது படைப்புகள் வாழவைக்கும்.”

– இவ்வாறு பெ.இராஜேந்திரன் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.